Wednesday, August 10, 2016

இது ‌ஐப்னாஒன்லைன் முகப்புத்தகப்பக்கத்தில் பதிவிடப்பட்டது. பல இணையத்தளங்கள் எங்கள் பெயர் குறிப்பிடாமல் இதை மீள் பிரசரம் செய்துள்ளன. ”யார் குத்தியும் அரிசியானால் சரி” என்பது போல் நல்ல கருத்துக்கள் எவர் மூலமாகப்பரவினாலும் சரி.


அன்புள்ள புலம் பெயர் உறவுகளே!

தயவு செய்து தண்டச்சோறு தின்ன பணம் அனுப்ப வேண்டாம். வெறுமனே எந்த உடலுழைப்புமின்றி வெறும் வாங்கித்தின்னும் சமூகமாக எம்மை மாற்ற வேண்டாம்.
யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக்கள் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் வேலை செய்யத்தான் ஆட்கள் இல்லை .
”.அந்த வேலை அப்படி,இந்த வேலை இப்படி ,எனது படிப்புக்கேற்ற வேலை இல்லை இது...படித்துக்கொண்டே வேலை செய்வதா ? ” என்றே பெரும்பாலான வேலை தேடுவோர் இங்கு கேட்கின்றனர். தினசரி பல வேலை தேடுவோரை நேர் முகத்தேர்வுகள் மூலம் சந்திப்பதால் நாம் இதை நன்கறிவோம். அரச உத்தியோகம் மற்றும் கிளார்க் உத்தியோகம் என்ற இரண்டையே குறி வைத்து இவர்களது கேள்விகள் அமைகிறது. (வெளியே போற வேலை எண்டா வேண்டாம்..ஓபீசுக்கேயே இருந்து செய்யிறமாதிரி வேலை எண்டாத்தாங்கோ ..)

திறமையானவர்களும் தம் தகுதிக்கேற்ப வேலை கேட்போரும் இல்லாமலில்‌லை அவர்கள் எவரும் காசில்லாத பிரச்சினையில் தவிப்பதில்லை. தமது செலவை தாமே பார்த்துக்கொள்கிறார்கள்.
3 நட்சத்திர உணவகத்தில் உணவு பரிமாறுபவர் முதல் முகாமையாளர் வரை, பல கல்வி மற்றும் கணினி நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் ( வெளிபோய்வருதல் மற்றும் இலக்குக்களை அடைய கடின உழைப்புள்ள தொழில் என்பதால் ஐயோ வேண்டாம் என்கிறார்கள் ) முதல் படிப்பில்லாதவர்க்கும் ,திறன் குறைந்தோருக்குமான பல ஏவலாளர் பணி உட்பட பல வேலைககள் காத்திருக்கின்றன. நட்டப்பட்டு மூடியதைவிட வேலையாள் இல்லாமல் மூடப்பட்ட நிறுவனங்களே யாழப்பாணத்தில் அதிகம் காணப்படுகின்றன.
எனவே உங்கள் உறவுகள் அல்லது வேறு யாராவது பஞ்சம் பசி என்று சொன்னால் சும்மா சும்மா காசு அனுப்பி இருந்த இடத்தில் உண்டு அவர்களை சோம்பேறிகளாகவும் சமூகத்திற்கு கேடு விளைவிப்பவர்களாவும் ஆக்காதீர்கள். உழைக்கக்சூடிய வயதும் உடல் ஆரோக்கியமும் இருப்பவர்கள் அனைவருக்குமு் அவர்கள் தகுதிக்கேற்ற வேலைகள்-(கவனிக்கவும் :அவர்கள் தகுதிக்கேற்ற ‌வேலைகளை ”)நாம் வழங்கத்தயாராக உள்ளோம். ஐப்னா ஒண்லைனில் பதிவு செய்த நுாற்றுக்கணக்கான நிறுவனங்கள் தங்களிற்கு வேலையாட்களைத்தரும்படி தினசரி எம்மை கேட்கின்றன. நாமும் தினசரி நேர்முகத்தேர்வுகளை நடாத்திக்கொண்டிருக்கிறோம்.ஆனால் வருபவர்களில் பெரும்பாலானவர் இந்த வெளிநாட்டு சப்போர்ட்டினால்-பசியோ தேவையோ இன்மையால் தாம் தம் தகுதிக்கு மீறிக்கனவுகண்ட உத்தியோகங்களையே நினைத்தபடி வேலையில் நாட்டம் காட்டாமல் உள்ளனர்.
‌புலம் பெயர் உறவுகளே நீங்கள் நினைத்தால் சோம்பேறிகள் அதிகரிப்பதை தடுத்து நம் யாழ்ப்பாணத்தை அதிக உந்து சக்தியுள்ள உற்பத்தித் தலை நகராக மாற்ற உதவலாம். உங்கள் உறவுகளுடனும் பகிருங்கள்.
சும்மா எவருக்குமு் பணம் அனுப்பாதீர்கள். காரணத்துடன் செயற்படுங்கள்.
உண்மையான சமூக அக்கறையுள்ளவர்க்கு இந்த அழைப்பின் நோக்கம் புரியும் என்று நம்புகிறோம்.
jaffnaonline.info - Jaffna's first online job bank .

No comments:

Post a Comment